ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 8.45 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. ‘கோவிந்தா… கோபாலா…’ என பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணதிர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளிலும் தேரை இழுத்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் வராக ஷேத்திரம் என போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் பெரியாழ்வார் மற்றும் பூதேவியின் அம்சமாகப் போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமாகும். இக்கோயிலின் 196 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாகவும் திகழ்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் திருஆடிப்பூரத் தேர் 112 அடி உயரம் கொண்டது. மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட இதிகாசக் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் நிறைந்த இந்தத் தேர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக சிறப்புப் பெற்றுள்ளது.
ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாளில் 16 வண்டி சப்பரமும், 4-ம் நாளில் கோவர்த்தன கிரி கிருஷ்ணர் அலங்காரமும் நடைபெற்றன. 5-ம் நாளில் பெரியாழ்வார் மங்களாசாசனம் மற்றும் ஐந்து கருட சேவையும், 7-ம் நாளில் சயன சேவையும் நடைபெற்றது. 8-ம் நாள் விழாவான நேற்று இரவு, ரெங்கமன்னார் தங்கக் குதிரை வாகனத்திலும், ஆண்டாள் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து, இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளச் செய்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை அழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாள் சார்பில் சீர்வரிசையாக அனுப்பி வைக்கப்பட்ட பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 8.45 மணிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து கீழ ரத வீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியபடி வடம் பிடித்து, நான்கு ரத வீதிகள் வழியாக தேரை இழுத்துச் சென்றனர்.
இந்த விழாவில் எம்எல்ஏக்கள் கார்த்தி, செல்வம், சார் ஆட்சியர் முகமது இர்பான், அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
