அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பதினான்காம் பாடல்
வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.
பொருள்
எம் தலைவியான அபிராமி அன்னையே! தேவர்களும் அசுரர்களும் உன்னைப் பக்தியுடன் வழிபடுகின்றனர். பிரம்மதேவரும் திருமாலும் உன்னை மனதில் நினைத்து தியானிக்கின்றனர். பேரானந்த வடிவமாக விளங்கும் சிவபெருமானோ, உன்னைத் தம் உள்ளத்தில் அன்புடன் நிலைபெறச் செய்துள்ளார். இவ்வாறு அனைவராலும் போற்றப்படும் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு, உன் குளிர்ச்சியான திருவருளைப் பெறுவது மிகவும் எளிதாகிறது.
