திருமலையில் பவித்ரோற்சவத்தின் 2-ம் நாள் விழா கோலாகலம்

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பவித்ரோற்சவத்தின் 2-ம் நாள் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விழா தொடங்கியது.

2-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, விலை உயர்ந்த பட்டுநூலால் செய்யப்பட்ட பவித்ர மாலைகள் உற்சவ மூர்த்திகளுக்கும், விமான வெங்கடேஸ்வரருக்கும் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜீயர்கள், அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.