அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்தொன்றாம் பாடல்
அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.
பொருள்
அபிராமவல்லித் தாயே! தேவமாதர்கள் உனது பரிவார தேவதைகளாக இருப்பதால், உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் வணங்கவோ, புகழ்ந்து பேசவோ விரும்பமாட்டேன். மனதில் வஞ்சகமும் தீய எண்ணங்களும் கொண்டவர்களுடன் நான் பழகமாட்டேன். எதையும் “என்னுடையது” என்று எண்ணாமல், அனைத்தும் உனக்கே உரியது என்று கருதி வாழும் யோகியர்களுடன் எப்போதும் நட்புடன் இருப்பேன்; அவர்களுடன் ஒருபோதும் பகை கொள்ளமாட்டேன். நான் அறிவில் குறைந்தவனாக இருந்தாலும், என்மீது நீ காட்டும் அளவற்ற கருணையை ஒருபோதும் மறக்கமாட்டேன்.
