அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்தாறாம் பாடல்
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.
பொருள்
மேரு மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானுடன் வீற்றிருக்கும் தாயே! நான் பெரிய அறிவும் ஞானமும் உடையவன் அல்ல. குறைந்த அறிவுடைய என்னை எப்போதும் காத்தருளும் உன் சிவந்த தாமரை போன்ற திருவடிகளைத் தவிர, வேறு எந்தத் துணையையும் நான் நாடமாட்டேன். தீவினைகளால் துன்பப்பட்டு வாழும் நான் பாடிய இந்தப் பாடல்கள் பொருள் இல்லாத வெறும் சொற்களாக இருந்தாலும், அவற்றில் உன் திருநாமங்களைப் போற்றிப் பாடியிருப்பதால், அவை உன்னால் ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல பாடல்களாகவே அமையும்.
