திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளத்தை ரூ.25 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக மேம்படுத்தி, நவீன வசதிகளுடன் அழகுபடுத்தும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து இருந்த தரைக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இடம்பெயர்ந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சியால் நகரின் பல்வேறு பகுதிகளில் மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் மூலம் ரூ.2 கோடி செலவில் தெப்பக்குளத்தை சீரமைத்து, நடைபாதைகள், அமர்விடங்கள், அலங்கார மின் விளக்குகள், அழகிய செடிகள் மற்றும் சிறிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. அதன் முதல்கட்டமாக ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தூர்வாரப்பட்ட தெப்பக்குளத்தில் மீண்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் தெப்பக்குளம் தற்போது தனது பழைய பொலிவை இழந்து, பொதுமக்கள் வருத்தத்துடன் கடந்து செல்லும் இடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன் கூறுகையில், “தனியார் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் ரூ.2 கோடியில் தெப்பக்குளத்தின் கரைகளை பலப்படுத்தி, முழுமையாக அழகுபடுத்த திட்டமிட்டிருந்தோம். முதற்கட்டமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குப்பைகள் மற்றும் வண்டல் மண் அகற்றப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்த இருந்த திட்டம் நிறுத்தப்பட்டது” என்றார்.
இதன் பின்னர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ், அறநிலையத் துறை நிதியின் மூலம் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை முழுமையாக மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.25 கோடி மதிப்பில் தெப்பக்குளத்தை நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக சீரமைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
