தஞ்சையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் நீரின்றி சம்பிரதாய வழிபாடு; ஏமாற்றமடைந்த மக்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால், ஆடிப்பெருக்கு விழா இந்த ஆண்டு வழக்கமான உற்சாகம் இன்றி, சம்பிரதாய முறையில் இன்று (ஆக. 3) அனுசரிக்கப்பட்டது.
ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில், நீர்நிலைகளுக்கு நன்றியறிதல் தெரிவிக்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக காவிரி கரையோரப் பகுதிகளில் இந்த விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அன்றைய தினம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அவல், பச்சரிசி, பழங்கள் உள்ளிட்ட படையல் பொருட்களை கொண்டு வந்து காவிரித் தாயை வழிபடுவது வழக்கம்.

அதேபோல், கடந்த ஓராண்டில் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை காவிரியில் சமர்ப்பித்து வழிபடுவதும், பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மற்றும் தாலிக் கயிறை மாற்றி அணிந்து காவிரித் தாயை வணங்குவதும் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த ஆண்டு காவிரியில் நீர்வரத்து இல்லாததால், தஞ்சாவூர் மாவட்டத்தின் கல்லணை, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் மணற்பரப்பில் பள்ளங்கள் தோண்டி ஊற்றாக சுரக்கும் நீரை பயன்படுத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் திருவையாறில் கூட, இந்த முறை குறைந்த எண்ணிக்கையிலான புதுமணத் தம்பதிகள் மற்றும் பொதுமக்களே கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு விழாவை எளிமையாகக் கொண்டாடினர். காவிரியில் நீர் இல்லாத நிலை காரணமாக, வழக்கமான திருவிழா உற்சாகம் குறைந்திருந்தது பக்தர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
