அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூற்றொன்றாம் பாடல்
மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.
பொருள்
மின்னலைப் போன்ற நுண்ணிய இடையையும், சிவபெருமான் அணைத்துக் கொண்ட பொன்னிறம் போன்ற ஒளிவீசும் அழகிய தனங்களையும் உடையவள் அபிராமி அன்னை. வேதங்கள் போற்றிக் கூறிய முறையில் அவளை பக்தியுடன் வழிபடும் அடியவர்களுக்கு, பலவிதமான இசைக்கருவிகள் முழங்க, வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறிச் செல்லும் பெருமைமிக்க இந்திர பதவியையே அருள்பவள் அபிராமி அன்னையாவாள்.
