அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூறாம் பாடல்
வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்
பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு
விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.
பொருள்
தேவர்களுக்கு பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதத்தை விருந்தாக வழங்கிய அபிராமி அன்னையே! மென்மையான கருணை உள்ளம் கொண்டவளே! பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களால் நான் இனி பாதிக்கப்படாதபடி, நீயே விரும்பி வந்து என் மனமாகிய தாமரையில் குடியேறி, அது உனது பழைய இருப்பிடமே போல நிலைத்திருக்கிறாய். உன் அருள் எனக்குக் கிடைத்துவிட்டதால், இனி என்னால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை.
