அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
பன்னிரண்டாம் பாடல்
கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.
பொருள்
என் அன்னையே! ஏழுலகங்களையும் ஈன்றெடுத்த தாயே! இரவும் பகலும் நான் நினைப்பது உன் திருப்புகழையே; கற்பது அனைத்தும் உன் திருநாமத்தையே. எப்போதும் மனமுருகி வேண்டுவது உன் இரு திருவடித் தாமரைகளையே. உன்னை வணங்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், உன்னை உண்மையான அன்புடன் வழிபடும் அடியவர்களுடன் இணைந்தே வணங்குகிறேன். இத்தகைய பாக்கியம் எனக்குக் கிடைத்ததற்குக் காரணம், முற்பிறவிகளில் நான் செய்த புண்ணியப் பயனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
