அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்து நான்காம் பாடல்
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.
பொருள்
அடியவர்களே! செல்வந்தர்களிடம் சென்று நமது வறுமை நிலையை எடுத்துக் கூறி, அவர்களிடம் அவமதிப்பையும் இகழ்ச்சியையும் பெறும் நிலை நமக்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால், தினமும் திரிபுரசுந்தரி அம்மையின் திருவடிகளை பக்தியுடன் வணங்குங்கள். உயர்ந்த தவத்தையும் நற்குணங்களையும் கடைப்பிடிக்காத கீழான குணம் கொண்டவர்களுடன் பழகாமல், தன்மானத்துடனும் பெருமையுடனும் வாழும் நிலையை அருளும் அன்னையின் திருவடிகளைத் தினமும் தொழுது மகிழுங்கள்.
