அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்தொன்பதாம் பாடல்
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.
பொருள்
யாழின் நரம்புகளில் இருந்து இனிமையான இசை எழுவது போல, இசையின் வடிவமாகவே விளங்கும் அபிராமித் தாயே! உடம்பு என்னும் கூட்டுக்குள் வாழும் உயிரை, பிரமனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் முடியும் நேரத்தில் எமன் வந்து எடுத்துச் செல்ல இருக்கும்போது, அரம்பையர் மற்றும் தேவமகளிர் சூழ்ந்து வணங்கும் தாயே! நீ விரைந்து வந்து, வளையல்கள் அணிந்த உன் அழகிய திருக்கரத்தால் எனக்கு அபயமுத்திரை காட்டி, “அஞ்சாதே” என்று அருள்வாயாக. அந்த ஆபத்தான நேரத்தில் என்னைத் தாங்கி, காத்தருள வேண்டும்.
