அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்தொன்றாம் பாடல்
உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.
பொருள்
அன்னையான உமாதேவியும், தம் இடப்பாகத்தில் உமையைத் தாங்கிய ஈசனும் இணைந்து அர்த்தநாரீசுவரராக ஒரே வடிவில் எழுந்தருளி, என்னைப் போன்ற பக்குவமற்ற எளியவர்களையும் தங்களுடைய திருவடிகளில் அன்பும் பக்தியும் செலுத்தும் வகையில் நல்வழிப்படுத்தினர். அதனால் இனி நான் பின்பற்ற வேண்டிய வேறு சமயநெறிகள் எதுவும் இல்லை. என் பிறவித் துன்பம் நீங்கிவிட்டதால், இனி என்னைப் பெற்றெடுக்க வேண்டிய தாயும் இல்லை. மேலும், மூங்கில்போன்ற அழகிய தோள்களைக் கொண்ட பெண்களின் மீது இருந்த ஆசையும் மோகமும் என்னைவிட்டு முற்றிலும் நீங்கிவிட்டன.
