அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்துமூன்றாம் பாடல்
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.
பொருள்
பரந்து விரிந்துள்ள மூவுலகிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளே! எல்லாப் பொருள்களிலும் நீ நிறைந்திருந்தாலும், அவற்றைக் கடந்தும் விளங்குபவளே! உன் அடியவர்களின் உள்ளத்தில் நன்கு கனிந்து விளைந்த பேரின்பம் என்னும் தேனே! உலகப் பற்றுகளை மறந்து ஆனந்த மயக்கத்தில் திளைக்கச் செய்யும் பேரானந்தமே! இரக்கத்திற்குரிய என் கண்களில் மணிபோல் ஒளிர்பவளே! நான் என் மனத்தில் உன்னைத் தியானிக்கும்போது, உன் திருவுருவத்தைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தின் உருவத்தையும் நினைக்க மாட்டேன். அதுபோல, உன் அடியவர்களுடன் கொண்டுள்ள தொடர்பை விட்டுப் பிற சமயங்களை நாடவும் விரும்ப மாட்டேன்.
