பழநி முருகன் கோயில் அன்னதானக் கூடத்தில் புதிய ஏற்பாடு: ஒரே பந்தியில் 410 பக்தர்கள் உணவருந்த வசதி

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், ஒரே பந்தியில் 410 பேர் உணவருந்தும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழநி முருகன் கோயில் அன்னதானக் கூடத்தில் இதுவரை ஒரு பந்தியில் 200 பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்தும் வசதி இருந்தது. இதனால் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டத்தின் கீழ், பழநி கோயிலில் தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர், 2012-ம் ஆண்டு முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கும் ஒரு பந்தி நடைபெறும் நிலையில், சராசரியாக 210 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தினமும் சுமார் 5,000 முதல் 6,000 பக்தர்கள் வரை அன்னதானம் சாப்பிட்டு வருகின்றனர். இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில்கூட பக்தர்கள் குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்தக் காத்திருப்பு 3 மணி நேரம் வரை நீடித்தது. இதனால் சில பக்தர்கள் பசி தாங்க முடியாமல் பாதியிலேயே வரிசையை விட்டு வெளியேறும் சூழலும் ஏற்பட்டது.

இதையடுத்து, அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு விரைவாக அன்னதானம் வழங்கும் வகையில், ஒரு பந்தியில் உணவருந்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கூடுதலாக 3 இடங்களில் மேஜை, நாற்காலி வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, தற்போது ஒரே பந்தியில் மொத்தம் 410 பேர் உணவருந்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறைந்துள்ளதாகவும், அதிக எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு தடையின்றி அன்னதானம் வழங்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையடிவாரத்தில் புதிய அன்னதானக் கூடம்

தற்போது அன்னதானத்துக்குத் தேவையான வாழை இலைகள், காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மலையடிவாரத்திலிருந்து வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், தினமும் மலைக்கோயிலில் சேரும் காய்கறி உள்ளிட்ட கழிவுப் பொருட்களும் வின்ச் ரயில் மூலம் மீண்டும் அடிவாரத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதனால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில், அன்னதானக் கூடத்தை மலையடிவாரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பயன்பெறுவதுடன், அன்னதானப் பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையடிவாரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள அண்ணா செட்டி மடம் பகுதியில் நவீன சமையல் கூடம், பக்தர்கள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய அன்னதானக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அரசின் அனுமதி கிடைத்ததும், பெருந்திட்ட வளர்ச்சிப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த இடத்தில் புதிய அன்னதானக் கூடம் அமைக்கப்பட உள்ளது. தற்போது அந்தப் பகுதி சுத்தப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *