பழநி: சுதந்திர தின விடுமுறையையொட்டி, பழநி முருகன் கோயிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோயில் வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை முதலே வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.

பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வருடாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச் ரயிலில் பயணிக்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அன்னதானக் கூடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரவு தங்க ரதத்தில் எழுந்தருளிய சின்னக்குமார சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் அதிகரித்ததால், பழநியின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
