அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்தொன்பதாம் பாடல்
சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் <உறவற்ற, அறிவு
மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.
பொருள்
அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் அபிராமி தேவியே! உன் சிவந்த திருவடிகளைத் தலையில் சூடுபவர்களுக்கு மோட்சத்தை அருளும் சிவபெருமானும் நீயும், எனக்கு மரணம் வரும் நேரத்தில் அறிவு மயங்கி நினைவு தடுமாறும்போது, சிவானந்தம் நிறைந்த பேரின்ப நிலையை எனக்கு அருள வேண்டும். அது உனக்குச் சிரமம் தரும் செயலாக இருந்தாலும், நீ விரைந்து வந்து என் முன்னே தோன்றி, என்னைக் காத்தருள வேண்டும்.
