அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்து மூன்றாம் பாடல்
விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்
உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.
பொருள்
அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற திருவடிகளில் புதிதாக மலர்ந்த பலவகையான மலர்களைச் சமர்ப்பித்து, இரவும் பகலும் உன்னை பக்தியுடன் வழிபடும் பெரியோர்கள், தேவர்களுக்கு அரசனான இந்திர பதவியையும், ஐராவத யானையையும், ஆகாய கங்கையையும், வலிமைமிக்க வச்சிராயுதத்தையும், கற்பகச் சோலையையும் பெற்று பேரானந்தத்துடன் வாழ்கிறார்கள்.
