அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்தாறாம் பாடல்
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.
பொருள்
தாயே அபிராமி! வண்டுகள் மொய்த்து தேன் சொரியும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்று, அவருடன் ஒன்றாகக் குடியிருப்பவளே! கையில் ஐந்து மலர் அம்புகளை ஏந்திய பைரவியே!
உன் அழகிய திருமேனியை என் மனதில் நினைத்து தியானித்தேன். அதன் பயனாக, உன் அருளால் என் உயிரைக் கொண்டு செல்ல யமன் வரும் வழியையே நான் அடைத்துவிட்டேன். அதனால் இனி யமனுக்கு என்னை அணுகும் வாய்ப்பில்லை.
