அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்து நான்காம் பாடல்
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.
பொருள்
தாயே அபிராமி! பல உயிர்களைப் பலியாக ஏற்றுக்கொள்ளும் மற்ற தெய்வங்களை நாடி நான் செல்லமாட்டேன்; அவர்களிடம் அன்பும் கொள்ளமாட்டேன். உன்னையே என் ஒரே தெய்வமாக ஏற்று, உன்மீது அன்பும் பக்தியும் கொண்டு வாழ்வேன். உன் புகழைத் தவிர வேறு எதையும் நான் பேசமாட்டேன். இந்தப் பரந்த உலகத்திலும், நான்கு திசைகளிலும், வானத்திலும் எங்கு பார்த்தாலும், உன் திருமேனியிலிருந்து வெளிப்படும் அருள் ஒளியையே காண்கிறேன்.
