அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பத்து மூன்றாம் பாடல்
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
பொருள்
தேவர்களுக்குத் தீங்கு செய்ய நினைத்து, தீய எண்ணங்களுடன் திரிபுரத்தில் வாழ்ந்த அசுரர்களை அழிக்க விரும்பிய ஈசன், மேருமலையை வில்லாக வளைத்து ஏந்திய திருக்கரங்களையும், நெருப்பைப் போன்ற சிவந்த திருமேனியையும் உடையவர். அந்த ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்திருப்பவள் அன்னை அபிராமி.
அவள் சிலம்பு அணிந்த சிறிய திருவடிகளையும், பாசக்கயிறு மற்றும் அங்குசத்தையும் கைகளில் கொண்டவள். ஐந்து மலர்களால் ஆன அம்புகளையும் ஏந்தியவள். இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரி அவள். சிந்தூரம் போன்ற அழகிய சிவந்த திருமேனியைக் கொண்ட அன்னை அபிராமியைப் போற்றி வணங்குவோம்.
