அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பதாம் பாடல்
அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!
பொருள்
ஒரே வடிவமாகவும், பல்வேறு வடிவங்களாகவும், எந்த உருவமும் இல்லாத அருவமாகவும் விளங்கும் என் தாயான உமாதேவியே! ஒருகாலத்தில் என்னைத் தடுத்து ஆட்கொண்டு, அருளால் காத்தருளினாய். அப்படிப்பட்ட உன் அருளை இப்போது இல்லை என்று மறுப்பது உனக்கே பொருத்தமானதா? அறியாமையால் நான் எத்தகைய தவறு செய்தாலும், கடலின் நடுவில் சென்று விழுந்தாலும், என் குற்றங்களைப் பொறுத்து, என்னைக் கரை சேர்த்து காப்பதே உன் கருணைமிக்க திருவுள்ளத்திற்கு ஏற்ற செயலாகும்.
