அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்துநான்காம் பாடல்
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.
பொருள்
ஒளிவீசும் மாணிக்கம் போன்றவளே! அந்த மாணிக்கத்தின் பிரகாசத்தைப் போன்ற பேரொளியுடையவளே! ஒளிரும் மாணிக்கங்களால் அழகாக வடிவமைக்கப்பட்ட ஆபரணத்தைப் போன்றவளே! அந்த ஆபரணங்களுக்கே மேலும் அழகு சேர்ப்பவளே! உன்னை நாடாமல் காலத்தை வீணாகக் கழிப்பவர்களுக்கு நோயைப் போன்றும், உன்னைச் சரணடைந்தவர்களின் பிறவித் துன்பத்தைப் போக்கும் மருந்தைப் போன்றும் விளங்குபவளே! அனைத்து தேவர்களுக்கும் இனிய பெருவிருந்தாகத் திகழ்பவளே! தாமரை மலரைப் போன்ற உன் திருவடிகளை வணங்கிய நான், இனி வேறு எவரையும் வணங்கமாட்டேன்.
