திருமலை: நவம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக, பல்வேறு ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடுகிறது.
இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை, சுப்ரபாதம், தோமாலை சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகளை குலுக்கல் முறையில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து, 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவுக்கு கிடைக்கும்.
வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு இலவச அங்கபிரதட்சண டோக்கன்களும், காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகின்றன. அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு மாற்றுத்திறனாளி பக்தர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், நவம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.
பக்தர்கள் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறைகளை அதிகாரப்பூர்வ திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளமான ttdevasthanams.ap.gov.in மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
