கோவை: மழை வேண்டி கழுதைகளுக்கு கோலாகல திருமணம்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை பொழியும் என்பது அப்பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது. இதையடுத்து, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.

லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் ‘பஞ்ச கல்யாணி’ முறைப்படி இந்தத் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், அருகிலுள்ள கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன.

மனிதர்களின் திருமணத்தைப் போலவே பெண் கழுதைக்கு புடவை அணிவித்து, வளையல் மற்றும் பாசி மணிகள் அணிவிக்கப்பட்டன. மேலும், உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி புதுப்பெண் போல் அலங்கரித்தனர். ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க பெண் கழுதைக்கு தாலி கட்டி திருமணம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் மொய்ப்பணம் வழங்கி மணமகன், மணமகளை ஆசீர்வதித்தனர். பின்னர் மறுவீடு அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டபோது கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும், அதன்பின்னர் நல்ல மழை பெய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். அந்த நம்பிக்கையுடன், தற்போது நடத்தப்பட்டுள்ள இந்தத் திருமணத்திற்குப் பிறகும் தங்கள் பகுதியில் நல்ல மழை பெய்யும் என அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *