மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: சந்திர தோஷம் நீக்கும் சிவத்தலம்!

சந்திரன் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்கள் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளன. திங்களூர், புதுச்சேரி அருகிலுள்ள பிறையூர், சென்னை அருகேயுள்ள சோமமங்கலம், வடஇந்தியாவின் சோம்நாத்பூர் உள்ளிட்ட தலங்கள் அந்த வரிசையில் சிறப்பு பெற்றவை. அவற்றில் ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி முக்கியமான சிவத்தலமாகத் திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அருள்மிகு சோமநாதேஸ்வரர்.

மாமன்னன் மகேந்திரவர்மப் பல்லவன் இக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெயராலேயே இவ்வூர் ‘மகேந்திரவாடி’ என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிவாலயம் மட்டுமன்றி, மகாவிஷ்ணுவுக்கான குடைவரைக் கோயிலையும் மகேந்திரவர்மப் பல்லவன் இப்பகுதியில் அமைத்துள்ளார்.

மகேந்திரவாடியில் மிகப்பெரிய ஏரியையும் உருவாக்கிய மன்னன், பாலாற்றிலிருந்து கால்வாய் வெட்டி அந்த ஏரியுடன் இணைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏரிக்கு மகேந்திர தடாகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில் கோட்டையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது கோட்டை இருந்த இடத்தில் ஒரு சிறிய பாறையும், அதன் மீது விநாயகர் சந்நிதியும் காணப்படுகிறது.

ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சோமநாதேஸ்வரர் ஆலயம் கருங்கல் திருப்பணியால் உருவான சிறியதொரு கோயிலாக இருந்தாலும், இறைவனின் சாந்நித்தியம் மிகுந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

சந்திரனுக்கு அருள்புரிந்த சோமநாதேஸ்வரர்

அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள். இவர்களை சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார் தட்சன். ஆனால் சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டும் அதிக அன்பு காட்டியதால், மற்ற மனைவிகள் மனவருத்தம் அடைந்து தட்சனிடம் முறையிட்டனர்.

இதனால் கோபமடைந்த தட்சன், சந்திரனைச் சபித்தார். சாபத்தின் விளைவாக சந்திரன் தனது அழகை இழந்து நோயால் அவதிப்பட்டான். அதிலிருந்து விடுபட சிவபெருமானைச் சரணடைந்து கடும் தவம் மேற்கொண்டான்.

சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனுக்கு அருள்புரிந்தார். மூன்றாம் பிறை வடிவில் இருந்த சந்திரனைத் தனது திருமுடியில் சூடிக்கொண்டார். இதனால் சிவபெருமான் சந்திரசேகரர் என்ற திருநாமத்தையும் பெற்றார். இறைவனின் அருளால் சந்திரன் மீண்டும் தனது அழகையும் பொலிவையும் பெற்றதாக ஐதீகம்.

சந்திரனுக்கு மட்டும் அல்லாமல், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் சஞ்சலங்களையும் போக்கி, மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அருளும் ஈசனாக சோமநாதேஸ்வரரை பக்தர்கள் போற்றுகின்றனர்.

கோயிலின் வடக்குப் பகுதியில் சந்திர புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. திங்கள்கிழமையில் இத்தீர்த்தத்தில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி மலர் சாத்தி, தயிர்சாதம் நைவேத்தியம் படைத்து வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கி மனதில் சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முருகப்பெருமான் மற்றும் லட்சுமிநாராயணர்

ஆலயப் பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனிச்சந்நிதி உள்ளது. ஆறு முகங்களுடனும், பன்னிரு கரங்களுடனும் மயிலின் மீது அமர்ந்த திருக்கோலத்தில், தேவியருடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சஷ்டி, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமையுடன் கூடிய விசாக நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு எனக் கருதப்படுகிறது.

மேலும், லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

எப்படிச் செல்வது?

சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் மகேந்திரவாடி அமைந்துள்ளது. பாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள் மகேந்திரவாடி வழியாகச் செல்கின்றன.

ஏரிக்காத்த அம்மன்

மகேந்திரவாடியின் மகேந்திர தடாகம் ஏரிக்கரையில் சப்தமாதர்களுக்காக அழகிய ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு தெய்வங்களுடன் விநாயகப் பெருமானும் அருள்பாலிக்கிறார்.

சப்தமாதர்களில் பைரவி அம்மனே இத்தலத்தின் பிரதான தெய்வமாக கருதப்படுகிறார். ஊர்மக்கள் இவரை ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என்ற பெயர்களாலும் அழைக்கின்றனர்.

ஒருகாலத்தில் ஏரியின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதாக ஐதீகம். அப்போது ஊர் மக்கள் சப்தமாதர்களை மனமுருகி வழிபட்டனர். அவர்களின் பிரார்த்தனைக்கு செவிசாய்த்த அம்மன், ஏரியின் கரையை காத்து, வெள்ளம் ஊருக்குள் புகாமல் மக்களைக் காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாகவே அம்மனை ‘ஏரி காத்த அம்மன்’, ‘மதகு காத்த அம்மன்’ என்று மக்கள் வழிபடத் தொடங்கியதாகவும், பின்னாளில் அந்தப் பெயர்கள் மருவி ‘ஏகாத்தம்மன்’, ‘மதகாத்தம்மன்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிவபெருமானின் அருளால் சந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்த திருத்தலமாகவும், பக்தர்களின் மனச்சஞ்சலங்களைப் போக்கும் தலமாகவும் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் ஆலயம் சிறப்புடன் விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *