அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்திரண்டாம் பாடல்
தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.
பொருள்
மேரு மலையைப் பொன் வில்லாகக் கொண்டு, அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவரும், மதம் கொண்ட யானையின் தோலை ஆடையாக அணிந்தவருமான வீரமிக்க சிவபெருமானின் உடல் முழுவதும் மணமிக்க சந்தனக் கலவையைப் பூசிய அபிராமி அம்மையின் சிவந்த தாமரை போன்ற திருக்கரத்தில் இருக்கும் கரும்பு வில்லும், மலர் அம்புகளும் என் மனதை விட்டு எப்போதும் நீங்காமல் இருக்க வேண்டும்.
