அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்து நான்காம் பாடல்
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.
பொருள்
அன்னை அபிராமி தன்னைச் சரணடைந்து வணங்கும் பக்தர்களுக்கு அன்புடன் சுவர்க்கலோகப் பதவியை அருள்பவள். அவள் பிரமதேவனின் நான்கு முகங்களிலும், தேன் சொட்டும் துளசி மாலையையும் கௌஸ்துப மணியையும் அணிந்த திருமாலின் மார்பிலும், சிவபெருமானின் இடப்பாகத்திலும், தேன் நிறைந்த தாமரை மலரிலும், ஒளிக்கதிர்களை வீசும் சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் எழுந்தருளி விளங்குகிறாள்.
