அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தெட்டாம் பாடல்
சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
பொருள்
ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானுடன், சொல்லும் அதன் பொருளும் போல எப்போதும் பிரியாமல் ஒன்றாக இணைந்து நிற்கும் நறுமணம் வீசும் பூங்கொடி போன்ற தாயே! மலரைப் போன்ற உன் திருவடிகளை இரவும் பகலும் இடைவிடாமல் வணங்கும் அடியவர்களுக்கு அழியாத உயர்ந்த நிலையும், என்றும் சிறப்புடன் நிலைத்திருக்கும் தவ வாழ்க்கையும் கிடைக்கும். இறுதியில் அவர்கள் சிவலோகத்தை அடையும் பெரும் பேறும் பெறுவர்.
.
