வரலட்சுமி விரதம் 2026: தேதி, வரலாறு மற்றும் பூஜை முறை

வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக பெண்கள் பக்தியுடன் கடைப்பிடிக்கும் முக்கியமான விரதங்களில் ஒன்றாகும். தீர்க்க சுமங்கலி வரம், கணவரின் நீண்ட ஆயுள், குடும்பத்தில் செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி உள்ளிட்ட நலன்கள் பெருக வேண்டும் என்பதற்காக திருமணமான பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். திருமணம் ஆகாத பெண்களும் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டி இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

வரலட்சுமி என்பது பக்தர்கள் வேண்டிய வரங்களை அருளும் மகாலட்சுமியின் திருவடிவமாக போற்றப்படுகிறது. செல்வம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நலன்களை வேண்டி வரலட்சுமியை வழிபடுவது வழக்கம். வீடுகளிலும் கோயில்களிலும் கலசம் அமைத்து, அதனை அம்மன் வடிவில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

வரலட்சுமி விரதம் 2026 எப்போது?

2026ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் தங்களால் இயன்ற முறையில் விரதம் இருந்து வரலட்சுமியை வழிபடலாம். சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் பூஜை செய்வது வழக்கம். விரதம் இருக்க முடியாதவர்கள் கூட பக்தியுடன் வீட்டில் வரலட்சுமியை எழுந்தருளச் செய்து பூஜை செய்து வழிபடலாம்.

வரலட்சுமி விரதத்தின் வரலாறு

ஸ்கந்த புராணத்தில் இடம்பெறும் ஐதீகத்தின்படி, சாருமதி என்ற பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி, தான் வரலட்சுமி என்றும், தன்னை விரதமிருந்து வழிபட்டால் குடும்பத்திற்கு தேவையான அனைத்து நலன்களும் கிடைக்கும் என்றும் அருளியதாக கூறப்படுகிறது.

இதனை சாருமதி தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களிடம் தெரிவித்தார். பின்னர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வரலட்சுமியை முறையாக வழிபட்டனர். பூஜை நிறைவடைந்தபோது அம்மனின் கைகளில் இருந்த வளையல்கள் ஒலி எழுப்பியதாகவும், அதை மகாலட்சுமியின் அருளாக பெண்கள் கருதியதாகவும் ஐதீகம் கூறுகிறது. அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை பெண்கள் பக்தியுடன் கடைப்பிடித்து வருவதாக நம்பப்படுகிறது.

வரலட்சுமி விரத பூஜை செய்வது எப்படி?

  1. முதலில் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் ஒரு சிறிய பீடம் அமைக்க வேண்டும்.
  2. பீடத்தின் மீது கலசம் வைத்து, அதில் தண்ணீர் அல்லது அரிசி நிரப்ப வேண்டும். நாணயங்கள், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை கலசத்தில் சேர்க்கலாம்.
  3. கலசத்தின் மீது தேங்காய் மற்றும் மாவிலைகளை வைத்து, அதனை வரலட்சுமி அம்மன் வடிவில் அலங்கரிக்க வேண்டும்.
  4. புதிய புடவை, நகைகள், மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களால் அம்மனை அலங்கரித்து வழிபடலாம்.
  5. அஷ்டலட்சுமிகளும் கலசத்தில் எழுந்தருளி அருள் புரிய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, எளிய முறையில் மந்திரங்கள் கூறி பூஜை செய்யலாம்.
  6. வளையல், ரவிக்கைத் துணி, பழங்கள், இனிப்பு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்களை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.
  7. ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் நூலை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து, பின்னர் வழக்கப்படி கழுத்திலோ அல்லது கைகளிலோ அணிந்து கொள்ளலாம்.
  8. சாருமதி மற்றும் வரலட்சுமி விரதத்தின் ஐதீகக் கதையைப் படித்து அல்லது கேட்டு வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
  9. சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்களை அம்மனுக்கு படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும்.
  10. பூஜை நிறைவடைந்த பின்னர் பிரசாதத்தை குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் வழங்கி விரதத்தை நிறைவு செய்யலாம்.

வரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமியை மனமுருகி வழிபட்டு, குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது. வழிபாட்டு முறைகள் குடும்பம் மற்றும் பகுதி வழக்கத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *