ராணிப்பேட்டை மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: சந்திரனின் சாபம் தீர்த்த சிவத்தலம்!

சந்திரன் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்கள் பல உள்ளன. திங்களூர், புதுச்சேரி அருகிலுள்ள பிறையூர், சென்னை அருகேயுள்ள சோமமங்கலம், வடஇந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் போன்றவை சந்திரன் வழிபட்ட சிறப்புமிக்க க்ஷேத்திரங்களாகக் கருதப்படுகின்றன.

அந்த வரிசையில் ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியில் அமைந்துள்ள அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோயிலும் முக்கியத்துவம் பெற்றது. இத்தலத்தின் இறைவன் சோமநாதேஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

மாமன்னன் மகேந்திரவர்மப் பல்லவன் இக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெயராலேயே இவ்வூர் மகேந்திரவாடி என அழைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சிவாலயத்தை மட்டுமின்றி, மகாவிஷ்ணுவுக்காகவும் இப்பகுதியில் குடைவரைக் கோயிலை அவர் அமைத்துள்ளார்.

மகேந்திரவாடியில் மிகப்பெரிய ஏரியையும் மகேந்திரவர்மப் பல்லவன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. பாலாற்றிலிருந்து கால்வாய் வெட்டி அந்த ஏரியுடன் இணைத்து, அதற்கு ‘மகேந்திர தடாகம்’ எனப் பெயரிட்டாராம். இப்பகுதியில் ஒரு காலத்தில் பெரிய கோட்டையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது கோட்டை இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் சிறிய பாறையும், அதன் மீது விநாயகர் சந்நிதியும் காணப்படுகிறது.

இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சோமநாதேஸ்வரர் ஆலயம், கருங்கற்களால் கட்டப்பட்ட சிறியதொரு திருக்கோயிலாக இருந்தாலும், மிகுந்த தெய்வீகச் சாந்நித்தியம் கொண்டதாக பக்தர்கள் கருதுகின்றனர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள் என்றும், அவர்களை சந்திரனுக்கு தட்சன் திருமணம் செய்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அவர்களில் கார்த்திகை மற்றும் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பு காட்டியதால், மற்ற மனைவிகள் வருத்தமடைந்து தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கோபமடைந்த தட்சன், சந்திரனைச் சபித்தார்.

தட்சனின் சாபத்தால் சந்திரன் தனது அழகை இழந்து நோயால் துன்புற்றான். சாபவிமோசனம் பெற சிவபெருமானைச் சரணடைவதே சிறந்த வழி என்பதை உணர்ந்த சந்திரன், கடும் தவம் மேற்கொண்டு ஈசனை வழிபட்டான்.

சந்திரனின் தவத்திலும் வழிபாட்டிலும் மகிழ்ந்த சிவபெருமான், மூன்றாம் பிறை வடிவில் இருந்த சந்திரனைத் தனது திருமுடியில் சூடிக்கொண்டார். இதனால் சிவபெருமான் ‘சந்திரசேகரர்’ என்ற திருநாமத்தையும் பெற்றார். இறைவனின் அருளால் சந்திரன் தனது இழந்த அழகையும் மீண்டும் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

சந்திரனின் சாபத்தைப் போக்கிய ஈசன், இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் களைந்து அருள்புரிவதாக நம்பப்படுகிறது. மனக்குழப்பம், சஞ்சலம் போன்றவற்றை நீக்கி, மனநிம்மதியையும் மகிழ்ச்சியான வாழ்வையும் அருளும் தலமாக மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் திருக்கோயில் பக்தர்களால் போற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *