வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்குகிறது. திருவிழாவையொட்டி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலைப்பாதையில் உள்ள ஓடைகள் வறண்டுள்ளதால் பக்தர்கள் போதுமான குடிநீரை உடன் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் 5 இடங்களில் நிரந்தர குடிநீர் தொட்டிகளும், திருவிழாவையொட்டி கூடுதலாக 5 இடங்களில் தற்காலிக குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் மலைஅடிவாரத்தில் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஒரு லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், போதிய மழையும் இல்லாததால் மலைப்பாதையில் உள்ள ஓடைகள் நீரின்றி வறண்டுள்ளன. குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அதிகளவில் பக்தர்கள் வருகை தருவதால் அனைவரும் தேவையான அளவு குடிநீரை உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் குளிப்பதற்கு போதிய தண்ணீர் இருக்காது என்பதால், பக்தர்கள் அடிவாரத்திலேயே குளித்துவிட்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சதுரகிரி செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான தாணிப்பாறை பாதையை பயன்படுத்த வேண்டும். மலைப்பாதையில் இறங்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு, ஒருவர் பின் ஒருவராக மலை ஏற வேண்டும். உடல் சோர்வு ஏற்பட்டால் உரிய இடத்தில் ஓய்வு எடுத்த பின்னரே மீண்டும் மலையேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய நோய் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், உடல்நலக் குறைபாடு கொண்டவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை திருவிழாவுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரையிலான 4 நாட்களிலும், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
