கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் இவ்விழாவை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் உத்தரவின்படி ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரை விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ராஜேந்திர சோழன் வாழ்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் நகரை உருவாக்கிய இதே பகுதியில் அவரது பிறந்த நாள் விழாவை நடத்துவது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.
போர், அரசியல், நிர்வாகம், வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ராஜேந்திர சோழன் சிறந்து விளங்கியதாகவும், கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்று சோழர்களின் பெருமையையும் தமிழர்களின் வீரத்தையும் உலகறியச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். வெற்றிகளுக்குப் பின்னர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக உருவாக்கி, பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியெழுப்பியதாகவும் கூறினார்.
சுமார் 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய நிலையில், இப்பகுதியின் வரலாற்றுப் பெருமைகளை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் வலியுறுத்தினார். ராஜேந்திர சோழனின் அரசியல் நுட்பம், போர்த்திறன், கடல் பயண அறிவு, நிர்வாகத் திறன் உள்ளிட்ட சிறப்புகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வரலாற்றுச் சின்னமாக திகழ்வதாகவும், கங்கை வரை சோழர்கள் பெற்ற வெற்றியை எடுத்துக்காட்டும் பல்வேறு சிற்பங்கள் கோயிலில் இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், 1987-ம் ஆண்டு கிடைத்த செப்பேடுகள் ராஜேந்திர சோழனின் ஆட்சி, தலைமுறைகள் மற்றும் கொடைகள் குறித்த முக்கிய வரலாற்றுத் தகவல்களை உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
கங்கைகொண்ட சோழபுரம் அரிய வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்குவதால், அதன் புகழை நிலைநிறுத்தும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், இப்பகுதியை முக்கிய சுற்றுலாத் தலமாக மேலும் வளர்ச்சியடையச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
விழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவுடன் பிரதோஷமும் இணைந்துள்ளதால், கோயில் மூலவருக்கு இன்று இருமுறை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை, மகளிர் திட்ட இயக்குநர் சு.தேன்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
