சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: முதல் நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின் முதல் நாளான இன்று, ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகத்தின் சாப்டூர் வனச்சரகத்திற்குட்பட்ட சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவதால், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள், வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கு பக்தர்கள் வந்து செல்லும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தாணிப்பாறை முதல் மலைப்பாதையில் 10 இடங்களில் அறநிலையத்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

விழாவின் முதல் நாளான இன்று ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர். கோயில்களில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

நாளை (செவ்வாய்க்கிழமை) சிவராத்திரி வழிபாடும், ஆகஸ்ட் 12-ம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில், டிஐஜி அபிநவ் குமார் மற்றும் எஸ்.பி.க்கள் தேவநாதன், கௌதம் கோயல் ஆகியோரின் மேற்பார்வையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *