கும்பகோணம் வட்டம், உடையாளூரில் வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது செல்வ மகா காளியம்மன் கோயில். சிதம்பரத்தில் நடராஜருக்கும் சிவகாமியம்மனுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் நடராஜர் வெற்றி பெற்றதாகவும், அதனால் சிவகாமியம்மன் ஆக்ரோஷமான தில்லைக் காளியாக சிதம்பரத்தின் புறநகரில் எழுந்தருளியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது ஆக்ரோஷத்தைத் தணித்து, சாந்த சொரூபமாக கும்பகோணத்தை அடுத்த உடையாளூரில் செல்வ மகா காளியம்மனாக குடிகொண்டதாக ஐதீகம்.

இத்தலத்தில் அம்மன் எட்டு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். வலது கைகளில் சூலம், பச்சைக்கிளி, உடுக்கை, கத்தி ஆகியவற்றையும், இடது கைகளில் அக்னிச்சட்டி, கேடயம், மணி, கபாலம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். தலையில் பாம்புடன் கூடிய ஜோலாகேச அலங்காரத்துடன், வலது காலை மடக்கி, இடது காலால் அசுரனை வதம் செய்து மிதித்த நிலையில் அம்மன் காட்சியளிக்கிறார்.
திருமணத் தடை நீங்க வெள்ளியால் செய்யப்பட்ட பச்சைக்கிளியையும், குழந்தைப்பேறு வேண்டுவோர் கருப்பு நிறச் சேலையையும், குடும்பப் பிரச்சினைகள் தீர வளையல்களையும் நேர்த்திக்கடனாகச் செலுத்துவது வழக்கம் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், பங்குனி திருவிழாவின்போது மண்ணடியில் விடிய விடிய நடைபெறும் கூத்தாடும் நிகழ்ச்சியில் நேர்த்திக்கடனாக கூத்தாடி செலுத்தி வேண்டிக்கொண்டால், அம்மன் அருளால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பங்குனி திருவிழாவின் போது மண்ணடியில் நடைபெறும் கூத்தாடும் நிகழ்ச்சியை செல்வ மகா காளியம்மனும், பால் குளத்தியம்மனும் சிறப்பு அலங்காரத்தில் நேரில் வந்து கண்டு அருள்வதாக ஐதீகம்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று இக்கோயிலில் நவசண்டி யாகம் நடைபெறும். அதற்கு மறுநாள் கோடாபிஷேகமும் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர்.
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகளும் உள்ளன.
