ஆடி மாதத்தில் எந்த பிரச்சனைக்கு எந்த வழிபாடு? வேண்டிய வரம் பெற எளிய பரிகாரங்கள்

ஆடி மாதம் தெய்வீக ஆற்றல் மிகுந்த, அம்மன் அருள் நிறைந்த புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் மனமார வேண்டிக்கொண்டு அம்மனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் எந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபட்டால் பல மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமல்ல, அனைத்து தெய்வங்களின் அருளும் அதிகம் பொழியும் சக்தி வாய்ந்த காலமாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த மாதத்தில் செய்யப்படும் விரதம், பூஜை, தானம், பரிகாரம் போன்றவை வேண்டுதல்களை விரைவில் நிறைவேற்றும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள் மற்றும் கிடைக்கும் பலன்கள்

  • தானம், தானியம், செல்வ வளம் பெருக – ஆடிக் கிருத்திகை நாளில் முருகன் கோவிலில் விரதமிருந்து பால் காவடி எடுத்து வழிபடலாம்.
  • தீராத நோய்கள் நீங்க – சமயபுரம் மாரியம்மனுக்கு கூழ் படைத்து, 6 தீபங்கள் ஏற்றி, 6 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு.
  • தடைபட்ட திருமணம் நடைபெற – ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் கோவிலில் விரதமிருந்து தாமரை மாலை சாற்றி, 11 சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்கள் தானம் செய்யலாம்.
  • எதிரிகளின் தொல்லை விலக – ஆடி வெள்ளிக்கிழமைகளில் வராஹி அம்மனை வழிபட்டு, அன்னதானம் அல்லது வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்கலாம்.
  • சாபம், பில்லி, சூனியம் போன்ற பாதிப்புகள் நீங்க – ஆடி அமாவாசை அன்று மேல்மலையனூர் அங்காளம்மனை விரதமிருந்து தரிசித்து, 8 முறை வலம் வந்து வழிபடுவது நல்லது.
  • குழந்தை பாக்கியம் கிடைக்க – ஆடிப்பூரம் நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மனை தரிசித்து, வளையல் தானம் செய்யலாம்.
  • நிரந்தர வேலை கிடைக்க – ஆடி வெள்ளிக்கிழமையில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து, 6 தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.
  • தொழில் வளர்ச்சி அடைய – ஆடி வெள்ளிக்கிழமையில் திருவாரூர் ராஜதுர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடலாம்.
  • திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமைய – ஆடிச்செவ்வாய்களில் பெண்கள் ஒளவையார் நோன்பு அல்லது கொழுக்கட்டை நோன்பு இருந்து, அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபடலாம்.
  • குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் பெருக – ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். விளக்கு பூஜை செய்வதும், அதில் கலந்து கொள்வதும் சுமங்கலி பாக்கியத்தையும் செல்வ வளத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
  • குடும்ப ஒற்றுமை நிலைத்து, வாழ்வு வளம் பெற – ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம் காணிக்கையாக செலுத்தலாம்.
  • மன அமைதி கிடைக்க, திருஷ்டி விலக – ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம்.
  • குலதெய்வ அருள் கிடைக்க – ஆடி மாதத்தில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

ஆடி மாதத்தில் இந்த வழிபாடுகளை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் மேற்கொள்வது சிறப்பான பலன்களை அளிக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஆடி மாதத்தில் தொடங்கிய இந்த வழிபாடுகளை மற்ற மாதங்களிலும் தொடர்ந்து செய்தால் இன்னும் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே அல்லது அருகிலுள்ள அம்மன் கோவிலில் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட தெய்வத்தின் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுவது நல்லதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *