கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு ஏன் வாள் காணிக்கை? எம்ஜிஆர் முதல் விஜய் வரை தொடரும் வழக்கம்

தென் இந்தியாவின் புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாக விளங்குவது கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இக்கோவிலுக்கு வாளை காணிக்கையாக வழங்கி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், மூகாம்பிகை அம்மனுக்கு மட்டும் வாள் காணிக்கை செலுத்தும் வழக்கம் ஏன் ஏற்பட்டது? இதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில், சக்தி வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற திருத்தலமாகும். மூகாம்பிகை அம்மன் மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த சொரூபமாகக் கருதப்படுகிறார். மேலும், இத்தலத்தில் கலைகளை அர்ப்பணிக்கும் விதமாக கலைஞர்கள் தங்களின் திறமைகளை அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபடுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

எம்ஜிஆர் முதல் விஜய் வரை…

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் பிரபலமான காணிக்கை வழக்குகளில் ஒன்று வாள் காணிக்கை. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இக்கோவிலுக்கு சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட தங்க வாளை காணிக்கையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அம்மனுக்கு வாள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

சமீபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற விஜயும் சுமார் 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கு காணிக்கையாக வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன், கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இத்தலத்தில் வாள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

வாள் காணிக்கை செலுத்தும் வழக்கம் எப்போது தொடங்கியது?

இந்த வழக்கம் சமீப காலத்தில் அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தலத்தில் அரசர்கள் வாளை காணிக்கையாக செலுத்தியதாக கோவில் வரலாற்று மரபுகள் கூறுகின்றன. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளடி நாயக்க மன்னர்களும் மூகாம்பிகை அம்மனை வாள் காணிக்கை செலுத்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக 1481-ம் ஆண்டு கல்வெட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், திப்பு சுல்தானுக்கும் இக்கோவிலுக்கும் தொடர்புடைய ஒரு மரபுக் கதை உள்ளது. கோவிலைத் தாக்க வந்தபோது திப்பு சுல்தானால் தனது முயற்சியை நிறைவேற்ற முடியவில்லை என்றும், பின்னர் அம்மனின் மகிமையை உணர்ந்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. மாலை நேர தீபாராதனையைக் கண்டு அவர் அம்மனுக்கு சலாம் செய்ததாகவும், அதன் நினைவாகவே இன்றும் மாலை நேரத்தில் ‘சலாம் மங்களாரத்தி’ நடைபெறுவதாகவும் கோவில் மரபில் கூறப்படுகிறது.

ஏன் வாளை காணிக்கையாக வழங்குகிறார்கள்?

பாரம்பரியமாக வாள் என்பது வீரம், சக்தி, வெற்றி, பாதுகாப்பு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. போருக்குச் செல்லும் அரசர்கள் தங்களுடைய வாளை தெய்வத்தின் முன் வைத்து வழிபட்டு, வெற்றிக்காக இறைவனின் அருளை வேண்டுவது வழக்கமாக இருந்தது.

காலப்போக்கில் இந்த மரபு அரசர்கள் மட்டுமின்றி, முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. தாங்கள் பெற்ற வெற்றிக்கு நன்றி செலுத்தவும், எதிர்கால செயல்களில் வெற்றி கிடைக்கவும், தங்களுடைய பலமும் ஆற்றலும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனும் வாள் காணிக்கை செலுத்தும் வழக்கம் உருவானது.

ஸ்வர்ணரேகை கொண்ட ஜோதிர்லிங்கத்தின் சிறப்பு

மூகாம்பிகை கோவிலின் கருவறையில் அம்மன் சன்னதியுடன், ஸ்வர்ணரேகை கொண்ட ஜோதிர்லிங்கமும் சிறப்பிடம் பெற்றுள்ளது. அந்த லிங்கத்தில் காணப்படும் தங்கக் கோடு சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதாக மரபில் கூறப்படுகிறது.

இதனால் இத்தலத்தில் சிவசக்தியின் அருளைப் பெறுவதற்காக பக்தர்கள் வழிபடுகின்றனர். நிலையான வெற்றி, பதவி, ஆற்றல் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது.

மூகாம்பிகை அம்மனும் வாள் காணிக்கையும்

மூகாம்பிகை தேவி மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக போற்றப்படுகிறார். குறிப்பாக காளி மற்றும் துர்கையின் வீர சக்தி அம்சங்களுடன் தொடர்புபடுத்தப்படுவதால், ஆயுத வழிபாடும் வாள் காணிக்கையும் இத்தலத்தில் தனிச்சிறப்பு பெற்றதாகக் கருதப்படுகிறது.

தீய சக்திகளை அழித்து, எதிரிகளை வென்று, பக்தர்களுக்கு துணிச்சலும் பாதுகாப்பும் வழங்கும் சக்தியாக மூகாம்பிகை அம்மன் பக்தர்களால் போற்றப்படுகிறார். இதன் காரணமாகவே அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய வெற்றி, வலிமை மற்றும் எதிர்கால நன்மைகளுக்காக அம்மனுக்கு வாள் காணிக்கையாக செலுத்துவதை ஒரு முக்கிய நேர்த்திக்கடனாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர். வழங்கியதாகக் கூறப்படும் தங்க வாள் உள்ளிட்ட காணிக்கைகள், இந்த மரபின் தொடர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் வாள் காணிக்கை என்பது வெறும் காணிக்கையாக மட்டுமல்லாமல், வீரம், வெற்றி மற்றும் சக்தியின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *