சிலப்பதிகார நாயகி கண்ணகியுடன் தொடர்புடைய சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் தல வரலாறு

சிலப்பதிகார நாயகியான கண்ணகி, மதுரையை எரித்த பின்னர் மன அமைதி பெறுவதற்காக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூருக்கு வந்து தங்கியதாக தலபுராணம் கூறுகிறது.

அப்போது சிறுவாச்சூரில் செல்லியம்மன் வழிபாட்டு தெய்வமாக அருள்பாலித்து வந்தாள். ஆனால், ஒரு மந்திரவாதி செல்லியம்மனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அவளின் சக்தியைப் பயன்படுத்தி தீய செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவு, மதுரை காளியம்மன் சிறுவாச்சூருக்கு வந்து தங்க இடம் கேட்டபோது, செல்லியம்மன் தனது துயரத்தை எடுத்துரைத்தாள். இதைக் கேட்ட மதுரை காளியம்மன், செல்லியம்மனை பாதுகாப்பதாக உறுதியளித்து, அங்கேயே தங்கி மந்திரவாதியை அழித்ததாக ஐதீகம் கூறுகிறது.

அதன்பின், செல்லியம்மன் பெரியசாமி மலைக்குச் செல்ல முடிவு செய்து, மதுரை காளியம்மன் சிறுவாச்சூரிலேயே இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். மேலும், தனக்கே முதல் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள்.

அந்த மரபின்படி, இன்றளவும் கோயிலில் தீபாராதனை நடைபெறும்போது முதலில் பெரியசாமி மலை நோக்கி தீபாராதனை காட்டப்பட்ட பின்னரே மதுரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது.

இத்தலம் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். காலப்போக்கில் “மதுரை காளியம்மன்” என்ற பெயர் மருவி “மதுரகாளியம்மன்” என அழைக்கப்படத் தொடங்கியது.

வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் மதுரகாளியம்மன், தனது நான்கு கரங்களில் உடுக்கை, பாசம், சூலம் மற்றும் அட்சய பாத்திரம் ஏந்திய திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக, சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த செவ்வாய்க்கிழமையில் காப்புக் கட்டும் நிகழ்வுடன் தொடங்கும் 13 நாள் பெருந்திருவிழா, தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு வைபவங்களுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *