கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், மனநலம் தொடர்பான பிரச்சினைகள், தீய சக்திகளின் தாக்கம் மற்றும் பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் நாடி வரும் புகழ்பெற்ற சக்தி தலமாக விளங்குகிறது.
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தில், அன்னை ராஜராஜேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமாலின் சகோதரியாகப் போற்றப்படும் தேவியின் மூலவருக்கு அருகிலேயே மகாவிஷ்ணுவும் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதனால் பக்தர்கள், “அம்மே நாராயணா… தேவி நாராயணா…” என்று பக்தி முழக்கத்துடன் வழிபடுகின்றனர்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன், நாளின் மூன்று வேளைகளிலும் மூன்று தெய்வீக வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் வெண்ணிற ஆடை அணிந்து கலைமகள் சரஸ்வதியாகவும், நண்பகலில் சிவப்பு நிற ஆடை அணிந்து செல்வ வளம் வழங்கும் மகாலட்சுமியாகவும், மாலை வேளையில் நீலம் அல்லது கருநிற ஆடை அணிந்து வீர சக்தியின் வடிவமான துர்கையாகவும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஆதிசங்கரருக்கு அளித்த வாக்குறுதியின்படி, கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் அருள்பாலித்ததைப் போலவே சோட்டானிக்கரையிலும் தேவி அருள்புரிகிறார் என்று நம்பப்படுகிறது. அதனால் இன்றளவும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் நடை திறப்பதற்கு முன்பாகவே சோட்டானிக்கரை கோயிலில் அதிகாலை பூஜைகள் நிறைவடைகின்றன என்பது சிறப்பம்சமாகும்.
இக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கீழ்க்காவு சன்னதியில் அன்னை பத்ரகாளி அருள்பாலிக்கிறார். இங்கு பில்லி, சூனியம் மற்றும் தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து விடுபட சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
மாசி மகம் திருநாளன்று மதியம் 2 மணியளவில், தேவி தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி தருகிறார். அந்த நாளில் பகவதியை மனமுருகி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, திருமண பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
