அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பத்து நான்காம் பாடல்
உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்
இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
பொருள்
அடியவர்களே! எல்லா செல்வங்களையும் அருளும் அன்னை அபிராமி, மென்மையான இடையில் சிவப்பு நிறப் பட்டாடையை அணிந்தவள். தலையில் ஒளிவீசும் பிறைச் சந்திரனைச் சூடியவள். வஞ்சகமும் தீய எண்ணங்களும் கொண்டவர்களின் உள்ளத்தில் ஒருபோதும் தங்காதவள். மிகவும் நுண்ணிய நூலைப் போன்ற சிறிய இடையழகைக் கொண்டவள். நம் இறைவனான சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்திருக்கும் அந்த அபிராமி அன்னை, இனி என்னை இந்த உலகில் மீண்டும் பிறக்க விடமாட்டாள். மீண்டும் பிறவாத பேரின்பத்தைப் பெற நீங்களும் அபிராமி அன்னையை மனமுருகித் தொழுது வேண்டுங்கள்.
