அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எழுபத்து மூன்றாம் பாடல்
தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.
பொருள்
அம்பிகையான அபிராமி அம்மனுக்குப் பிரியமான மலர் கடம்பு. அவளுடைய ஆயுதங்கள் ஐந்து மலர் அம்புகளும், கரும்பு வில்லும் ஆகும். அவளுடைய மந்திரத்தைச் சாதனை செய்பவர்களான வயிரவர்களால் துதிக்கப்படும் நள்ளிரவு நேரமே அவளை வழிபடுவதற்குச் சிறந்த நேரமாகும். எனக்கு முக்தியையும் உய்வையும் அளிப்பதற்காக அவளுடைய திருவடிகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன.
அபிராமி அன்னைக்கு நான்கு சிவந்த திருக்கரங்களும், மூன்று திருவிழிகளும் உள்ளன. சிவந்த திருமேனியுடன் விளங்கும் இந்தத் தாய்க்கு ‘திரிபுரை’ என்ற திருப்பெயரும் உண்டு.
