அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நாற்பதாவது பாடல்
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.
பொருள்
ஒளி வீசும் அழகிய நெற்றியில் மூன்றாவது கண்ணைக் கொண்ட அபிராமி அன்னையை, தேவர்கள் அனைவரும் வந்து வணங்கி வழிபட விரும்புகின்றனர். அத்தகைய பெருமைமிக்க அன்னையைத் தொழுது வழிபடும் வாய்ப்பு எனக்கு எவ்வாறு கிடைத்தது? அறியாமை நிறைந்த மனம் கொண்டவர்களுக்கு, மிக அருகில் இருந்தாலும் அவளைக் காண முடியாது. ஆனால் நான் அந்த அரிய அன்னையைக் கண்டு வணங்கி, அவளுடைய பேரன்பைப் பெறும் பேற்றைப் பெற்றிருக்கிறேன். இதற்குக் காரணம், நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களின் பலனே என்று கருதுகிறேன்.
