அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
முப்பத்தெட்டாம் பாடல்
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
பொருள்
இந்திர பதவி போன்ற உயர்ந்த இன்பமான பதவியைப் பெற்று, தேவலோகத்தில் உள்ள அமராவதி நகரை ஆட்சி செய்ய விரும்புபவர்களே! அதைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
பவளக்கொடியைப் போன்ற சிவந்த அழகிய உதடுகளையும், அதற்கேற்றவாறு குளிர்ச்சியும் இனிமையும் தரும் புன்னகையுடன் வெண்முத்துப் போன்ற அழகிய பற்களையும் கொண்டவளும், எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணமான ஈசனை மகிழ்விப்பவளும், அவரது தவத்தைக் கலைக்கும் அளவுக்கு அழகிய உடுக்கை போன்ற மெலிந்த இடையையும், அதனை அழுத்தும் பருத்த தனங்களையும் உடையவளுமான அபிராமி அன்னையை பக்தியுடன் வழிபடுங்கள். அவளது அருளால் உயர்ந்த பதவிகளையும் இன்பங்களையும் பெறலாம்.
