வரலட்சுமி விரதம் 2026: தேதி, விரத முறை, பூஜை செய்வது எப்படி?
வரலட்சுமி விரதம் என்பது பெண்கள் சிறப்பாகக் கடைப்பிடிக்கும் முக்கியமான ஆன்மிக விரதங்களில் ஒன்றாகும். குடும்பத்தில் செல்வ வளம், ஆரோக்கியம், மகிழ்ச்சி பெருகவும், கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவும், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுவதாக நம்பப்படுகிறது. திருமண வரம் எதிர்பார்க்கும் பெண்களும் வரலட்சுமியை வழிபட்டு பிரார்த்தனை செய்வது சிறப்பு. அஷ்டலட்சுமிகளின் அருளைப் பெறுவதற்கான சிறப்புமிக்க நாளாகவும் வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
மகாலட்சுமியின் அருளால் வேண்டிய வரங்களைப் பெறுவதற்காக வரலட்சுமி அம்மனை வழிபடும் இந்த விரதம் வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வீட்டில் கலசம் வைத்து, அதனை வரலட்சுமி அம்மனாக அலங்கரித்து, மலர்கள், நகைகள், புடவை உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்து பூஜை செய்வது வழக்கம். செல்வ வளம், ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர்.
பொதுவாக ஆடி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையிலோ அல்லது ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையிலோ இந்த விரதம் அமையலாம். திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், திருமணமாகாத பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.
வரலட்சுமி விரதம் 2026 எப்போது?
2026ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று பக்தர்கள் தங்களால் இயன்ற முறையில் விரதம் இருந்து வரலட்சுமி அம்மனை வழிபடலாம். சிலர் முழுநாள் விரதம் இருப்பார்கள்; சிலர் விரதம் இல்லாமலும் வீட்டில் வரலட்சுமி பூஜை செய்வார்கள். காலையிலும், மாலையிலும் தங்களது குடும்ப வழக்கத்திற்கேற்ப பூஜை மேற்கொள்வது வழக்கம்.
வரலட்சுமி விரதத்தின் வரலாறு
ஸ்கந்த புராணத்தில் கூறப்படும் வரலட்சுமி விரதக் கதையின்படி, சாருமதி என்ற பிராமணப் பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றியதாகக் கூறப்படுகிறது. தான் வரலட்சுமி என அறிமுகப்படுத்திய அம்மன், ஆடி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து தன்னை வழிபட்டால் குடும்பத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் எனக் கூறியதாக நம்பப்படுகிறது.
தான் கண்ட கனவை சாருமதி தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து வரலட்சுமி அம்மனை முறைப்படி பூஜித்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பூஜை நிறைவடைந்தபோது அம்மன் அணிந்திருந்த வளையல்கள் அசையும் ஒலி கேட்டதாகவும், அதை அம்மனின் அருளாசியாக பெண்கள் கருதியதாகவும் ஐதீகம் கூறுகிறது.
அதன் பின்னர் இந்த விரதத்தை மேற்கொண்ட பெண்களின் குடும்பங்களில் செல்வ வளமும், நலன்களும் பெருகியதாகக் கூறப்படும் நம்பிக்கை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது.
வரலட்சுமி விரதம் பூஜை முறை
- முதலில் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து, பூஜை செய்வதற்காக சிறிய பீடம் ஒன்றை அமைக்க வேண்டும்.
- பீடத்தில் கலசம் வைத்து, அதில் தண்ணீர் அல்லது அரிசி நிரப்பி, நாணயங்கள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை இட வேண்டும். பின்னர் கலசத்தின் மீது தேங்காய் மற்றும் மாவிலைகளை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
- கலசத்தை புதிய புடவை, நகைகள் உள்ளிட்டவற்றால் வரலட்சுமி அம்மனைப் போல அழகாக அலங்கரித்து, மஞ்சள் மற்றும் குங்குமம் இட வேண்டும்.
- வாசனைமிக்க மலர்களால் அம்மனை அலங்கரித்து, அஷ்டலட்சுமிகளும் கலசத்தில் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்யலாம்.
- குடும்ப வழக்கத்திற்கேற்ப லட்சுமி மந்திரங்களைச் சொல்லி எளிமையான முறையில் பூஜை செய்யலாம்.
- வளையல், ரவிக்கைத் துணி, பழங்கள், இனிப்புகள், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட மங்களப் பொருட்களை அம்மனுக்குப் படைத்து, பின்னர் அவற்றை சுமங்கலி பெண்களுக்கு வழங்குவது வழக்கம்.
- ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் நூலை அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்டு, பின்னர் கழுத்திலோ அல்லது கையிலோ அணிந்து கொள்ளலாம். தொடர்ந்து சாருமதி வரலட்சுமி விரதக் கதையைப் படித்து அல்லது கேட்டு வழிபடலாம்.
- இறுதியாக சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்களை அம்மனுக்குப் படைத்து, தீபாராதனை காட்ட வேண்டும். பின்னர் பிரசாதத்தை குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் வழங்கி, தாங்களும் ஏற்றுக்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
