ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபடச் சிறப்புமிக்க திருத்தலங்களில் தேவிகாபுரமும் ஒன்றாகும். இங்கு கனககிரீஸ்வரர் திருக்கோயில், பாலமுருகன் திருக்கோயில், பெரியநாயகி அம்மன் திருக்கோயில் என பல்வேறு சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. வாருங்கள், இத்தலங்களின் பெருமைகளைப் பார்ப்போம்.

சென்னையிலிருந்து ஆரணி – திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ தொலைவில் தேவிகாபுரம் அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியில் பிரமாண்டமாக அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் திருக்கோயில். ஏழு நிலைகளைக் கொண்ட இக்கோயிலின் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அடுத்தபடியாக உயரமான ராஜகோபுரங்களில் இதுவும் குறிப்பிடத்தக்கது.

கோயிலுக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்புடன் கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. பிரமாண்டமான மதில் சுவர் இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இதன் காரணமாகவே பெரியவர்கள் ‘தேவிகாபுரம் மதிலழகு’ என்று புகழ்ந்துள்ளனர்.

மதில்சுவரில் யானை, வராகம், குதிரை, மான், நரி, ரிஷபக் குஞ்சரம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் நீண்ட வரிசையில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய சிற்பத் தொகுப்புகள் வேறு பல கோயில்களில் அரிதாகவே காணப்படும் அளவுக்கு சிறப்பானவை.

மூன்று பிராகாரங்களைக் கொண்ட இத்திருக்கோயிலின் முதல் பிராகாரத்தில் ஐந்து கற்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட விநாயகர் திருமேனி தனிச்சிறப்பு பெற்றது. அதற்கு அருகில் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அவரது கரங்களில் சக்தி, வாள், சூலம், சக்கரம், அங்குசம் உள்ளிட்ட ஆயுதங்களும், அபய முத்திரையும் காணப்படுகின்றன. இடக்கரங்களில் வஜ்ரசக்தி, தாமரை, பாசம், தண்டாயுதம், கதை உள்ளிட்டவற்றை ஏந்தி அருள்கிறார்.

வெளிப்பிராகாரத்தில் பல்வேறு மரங்கள், பூச்செடிகள் மற்றும் நட்சத்திர மரங்கள் அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள திருக்குளம் ‘சிவகங்கை தீர்த்தம்’ என அழைக்கப்படுகிறது.

36 தூண்களைக் கொண்ட மகா மண்டபம் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பெரியபுராணக் காட்சிகள், காலசம்ஹார மூர்த்தி, பார்வதியின் தவம், திருமாலின் அவதாரங்கள், அர்ச்சுனனின் தவம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் இங்கு காணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அமைந்துள்ள இரண்டாவது கோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது.

இரண்டாவது பிராகாரத்தில் உள்ள நடராஜர் மண்டபத்தின் தூண்சிற்பங்களும் கண்கவர் வகையில் அமைந்துள்ளன. மூன்றாவது பிராகாரத்தில் விநாயகர், விஷ்ணு, வள்ளி–தேவசேனை சமேத கந்தப்பெருமான், சண்டேசர் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் காணப்படும் சிற்பத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்க கலைப்படைப்புகளாகும்.

மூலஸ்தானத்தில் உலகை ஆளும் பெரியநாயகியாகிய பிரஹன்நாயகி அம்மன் நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய–வரத முத்திரைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்.

கனககிரி மலைக்கோயில்

கனககிரி மலையில் அருள்பாலிக்கும் பொன்மலை நாதரான கனககிரீஸ்வரரை தரிசிக்க 302 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலையின் உச்சியிலிருந்து சுற்றிலும் பார்த்தால் திருவண்ணாமலை, பர்வதமலை, சம்பத்கிரி மலை, திருமலை உள்ளிட்ட பல மலைகளின் அழகிய காட்சிகளை ரசிக்கலாம்.

மலைக்கோயிலில் மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கொடிமரத்தைக் கடந்து சென்றதும் உட்பிராகாரத்தில் விநாயகர், அருணகிரிநாதரால் பாடிப் போற்றப்பட்ட கனககிரி ஆறுமுகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், விசாலாட்சி, சண்டேசர் உள்ளிட்ட சந்நிதிகளை தரிசிக்கலாம்.

மூலஸ்தானத்தில் கனககிரீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியாக அருள்பாலிக்கிறார். இங்கு காசி விஸ்வநாதரையும் தரிசிக்கலாம். மலைக்கோயிலில் அம்பிகைக்கு தனிச் சந்நிதி இல்லை. அதேபோல் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி சந்நிதி இல்லை.

எனவே, சுவாமி–அம்பாள் இருவரையும் முழுமையாக தரிசித்த புண்ணியத்தைப் பெற, மலையிலுள்ள கனககிரீஸ்வரர் கோயிலையும் மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலையும் சென்று வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் கோயிலும் தனியாக அமைந்துள்ளது. ஒன்பது கற்களால் கட்டப்பட்ட இக்கோயிலை சிம்மத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையைச் சுற்றிலும் கோஷ்ட மூர்த்தங்கள் அமைந்துள்ளன. விஜயநகர அரசர்களின் கலைப்பாணியை எடுத்துக்காட்டும் அழகிய திருக்கோயிலாக இது விளங்குகிறது.

பாலமுருகன் திருக்கோயில்

கனககிரி கோயிலுக்கு அருகிலுள்ள சிறிய குன்றின் மீது பாலமுருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் முயற்சியால் 1973-ம் ஆண்டு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இங்கு பங்குனி உத்திரப் பெருவிழா பத்து நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் அபிஷேக–ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை மாத பூச நட்சத்திர நாளில் சேக்கிழார் விழாவும் நடத்தப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாளில் கனககிரி மற்றும் பாலமுருகன் மலைகளைச் சுற்றி கிரிவலம் வரும் வழக்கமும் உள்ளது.

ஆடிக்கிருத்திகை திருநாளில் வாய்ப்புள்ள பக்தர்கள் தேவிகாபுரம் சென்று கனககிரீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் சேனாதிபதியாக விளங்கும் ஆறுமுகப்பெருமானை தரிசித்து வழிபடலாம். இறைவன்–இறைவியின் அருளும் முருகப்பெருமானின் திருவருளும் பெற்று, வாழ்வில் வளமும் நலமும் பெருகட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *