கோவை: மழை வேண்டி கழுதைகளுக்கு விமரிசையாக திருமணம் – பாரம்பரிய நம்பிக்கையில் கிராம மக்கள்!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மழை வேண்டி பாரம்பரிய முறையில் கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் ‘பஞ்ச கல்யாணி’ முறைப்படி கழுதைகளின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், அருகிலுள்ள கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன.

மணமகளான பெண் கழுதைக்கு புடவை அணிவித்து, வளையல்கள் மற்றும் பாசி மணிகள் அணிவித்து, உதட்டுச்சாயம், நகச்சாயம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி புதுப்பெண் போல அலங்கரித்தனர். மணமகனான ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மணமகன், மணமகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க, பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டு திருமணம் முறைப்படி நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் மொய்ப்பணம் வழங்கி, கழுதைகளை ஆசீர்வதித்தனர்.
திருமணத்தைத் தொடர்ந்து மறுவீடு அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கம்பங்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று கடுமையான வறட்சி ஏற்பட்டபோது கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும், அதன் பின்னர் நல்ல மழை பெய்ததாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தற்போது நடைபெற்றுள்ள இந்தத் திருமணத்தால் தங்கள் பகுதியில் விரைவில் மழை பொழியும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
