மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் கோயில்: சந்திர தோஷம் நீங்கி மன அமைதி தரும் சிவத்தலம்!
சந்திரன் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்ற திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றில் திங்களூர், புதுச்சேரி அருகிலுள்ள பிறையூர், சென்னை அருகே உள்ள சோமமங்கலம், வடஇந்தியாவின் சோம்நாத்பூர் உள்ளிட்ட தலங்கள் குறிப்பிடத்தக்கவை. அந்த வரிசையில் ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி சோமநாதேஸ்வரர் திருக்கோயிலும் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

மகேந்திரவாடியில் அருள்பாலிக்கும் இறைவன் சோமநாதேஸ்வரர். மாமன்னன் மகேந்திரவர்ம பல்லவன் இக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெயரிலேயே இவ்வூர் மகேந்திரவாடி என அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிவாலயம் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவுக்கும் இப்பகுதியில் குடைவரைக் கோயிலை மகேந்திரவர்ம பல்லவன் அமைத்ததாகச் சொல்லப்படுகிறது.
மகேந்திரவாடியில் மிகப்பெரிய ஏரியையும் மன்னன் உருவாக்கியதாக ஐதீகம். பாலாற்றிலிருந்து கால்வாய் வெட்டி அந்த ஏரியுடன் இணைத்து, அதற்கு மகேந்திர தடாகம் என்று பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. முற்காலத்தில் இப்பகுதியில் கோட்டையும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது கோட்டை இருந்த இடத்தில் ஒரு சிறிய பாறையும், அதன் மீது விநாயகர் சந்நிதியும் காணப்படுகிறது.
மன சஞ்சலங்களைப் போக்கும் சோமநாதேஸ்வரர்
மகேந்திரவாடியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சோமநாதேஸ்வரர் ஆலயம் கருங்கல் திருப்பணியால் உருவாக்கப்பட்ட சிறியதொரு திருக்கோயில். ஆலயம் சிறியதாக இருந்தாலும், இங்கு அருளும் இறைவனின் சாந்நித்தியம் சிறப்புமிக்கதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
சந்திரனுக்கு அருள்புரிந்த சிவபெருமான் கிழக்கு நோக்கியும், அம்பிகை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
சந்திரனுக்கு சாப விமோசனம் தந்த சிவபெருமான்
அசுவினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள் என்று புராணங்கள் கூறுகின்றன. இவர்களை சந்திரனுக்கு தட்சன் திருமணம் செய்து வைத்தார். ஆனால் சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டும் அதிக அன்பு காட்டியதால், மற்ற மனைவிகள் வருத்தமடைந்து தட்சனிடம் முறையிட்டனர்.
இதனால் கோபமடைந்த தட்சன், சந்திரனுக்கு சாபம் அளித்தார். சாபத்தின் விளைவாக சந்திரனின் அழகு குறைந்து, அவர் நோயால் அவதிப்பட்டார். இதிலிருந்து விடுபட சிவபெருமானை சரணடைந்து தவம் மேற்கொண்டார்.
சந்திரனின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், அவனுக்கு சாப விமோசனம் அருளியதுடன், மூன்றாம் பிறை வடிவில் இருந்த சந்திரனைத் தனது திருமுடியில் சூடிக்கொண்டார். இதனால் சிவபெருமானுக்கு சந்திரசேகரர் என்ற திருநாமமும் ஏற்பட்டது. இறைவனின் அருளால் சந்திரனும் தனது இழந்த அழகை மீண்டும் பெற்றதாக ஐதீகம் கூறுகிறது.
சந்திர தோஷம் நீங்கும் வழிபாடு
சந்திரனுக்கு மட்டுமல்லாமல், தம்மை நாடி வரும் பக்தர்களின் மனக்குறைகளையும் சஞ்சலங்களையும் போக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை அருளும் ஈசனாக சோமநாதேஸ்வரர் போற்றப்படுகிறார்.
கோயிலின் வடக்குப் பகுதியில் சந்திர புஷ்கரணி தீர்த்தம் அமைந்துள்ளது. திங்கள்கிழமை அன்று இந்த தீர்த்தத்தில் நீராடி, சோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி மலர் சாத்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் சந்திர தோஷம் விலகி மனதில் நிம்மதி நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முருகப்பெருமானுக்கும் தனிச்சந்நிதி
ஆலயப் பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனிச்சந்நிதி உள்ளது. ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது தேவியருடன் அமர்ந்த திருக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
சஷ்டி, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் விசாக நட்சத்திர தினங்களில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு எனக் கருதப்படுகிறது. மேலும் லட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
எப்படி செல்வது?
சோளிங்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் மகேந்திரவாடி அமைந்துள்ளது. பாலா திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள் மகேந்திரவாடி வழியாகச் செல்கின்றன.
ஏரியை காத்த ஏகாத்தம்மன்!
மகேந்திரவாடி மகேந்திர தடாகத்தின் கரையில் சப்தமாதர்களுக்காக அமைந்துள்ள ஆலயமும் குறிப்பிடத்தக்கது. இங்கு கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு சக்திகளுடன் விநாயகப் பெருமானும் அருள்பாலிக்கிறார்.
சப்தமாதர்களில் பைரவி அம்மனே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார். இப்பகுதி மக்கள் இவரை ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என்றும் அழைக்கின்றனர்.
ஒருகாலத்தில் மகேந்திர தடாகத்தின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது ஊர் மக்கள் சப்தமாதர்களை வேண்டி வழிபட்டனர். அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற அம்மன், ஏரியின் கரையைப் பாதுகாத்து, வெள்ளம் ஊருக்குள் புகாமல் மக்களைக் காப்பாற்றியதாக ஐதீகம்.
இதனால் ஏரியை காத்த அம்மன், மதகை காத்த அம்மன் என்ற பெயர்கள் ஏற்பட்டதாகவும், காலப்போக்கில் அவை ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என மருவியதாகவும் கூறப்படுகிறது.
