ஸ்ரீரங்கம்: 3 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் கிழக்கு வாசல் கோபுரம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ள தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரம், கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை (ஆக.9) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது.

‘பூலோக வைகுண்டம்’ என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தில் உள்ள கொடுங்கை எனப்படும் முன்புற வளைவுப் பகுதி, கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தப் பாதையில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து, கோபுரத்தை பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகளுக்காக கிழக்கு வாசல் பாதை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய விழாக்களின் போது, பக்தர்கள் கோயிலுக்கு எளிதாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோபுர சிற்ப வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்தபதிகள் அடங்கிய வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி, கோபுரத்தின் பழமை மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் மாறாமல் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கோபுரத்தை நேரில் இரண்டு முறை ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக புனரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்தப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து நாளை (ஆக.9) காலை 8 மணிக்கு கோபுரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், கிழக்கு வாசல் கோபுரப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க உள்ளார்.

திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *