திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர திருக்கல்யாண விழா: அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய திரிபுரசுந்தரி அம்பாள்
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாழக்கோயில் வளாகத்தில் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலும், தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. தாழக்கோயில் வளாகத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து, முக்கிய வீதிகளில் அம்பாளின் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.
வீதியுலாவைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து அம்பாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
