கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அருளாட்சி புரியும் மாசாணி அம்மன், பக்தர்களால் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

அம்மன் வழிபாட்டில் தனிச்சிறப்பு பெற்ற மயான தேவதையாக மாசாணி அம்மன் விளங்குகிறார். பொதுவாக கோயில்களில் அம்மன் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோ காட்சி தருவார். ஆனால், ஆனைமலை மாசாணி அம்மன் ஆலயத்தில் சுமார் 17 அடி நீளத்தில் சயனக் கோலத்தில் அம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தின் தோற்றம் குறித்து ஒரு பழமையான வரலாறு கூறப்படுகிறது. ஆற்றில் அடித்து வந்த மாங்கனியை, அரசனின் தோட்டத்தில் விளைந்தது என்பதை அறியாமல் ஓர் இளம் பெண் உண்டதாகவும், அதனால் கோபமடைந்த மன்னன் உத்தரவின்படி அவள் கொல்லப்பட்டதாகவும் தலவரலாறு தெரிவிக்கிறது. பின்னர் அந்தப் பெண்ணை மயானத்தில் அடக்கம் செய்து, அவளது நினைவாக உருவம் ஒன்றை அமைத்து மக்கள் வழிபடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

மயான மண்ணில் சயனித்த நிலையில் அமைக்கப்பட்ட அந்த உருவம் காலப்போக்கில் ‘மயான சயனி’ என்றும், பின்னர் ‘மாசாணி’ என்றும் அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுவே இன்று மாசாணி அம்மன் என்ற திருநாமத்தில் வழிபடப்படும் தெய்வமாக விளங்குகிறது.

மேலும், சீதையைத் தேடி ராமர் தென்னகம் நோக்கிப் பயணித்தபோது, ஆனைமலை உம்பாற்றின் கரையோர மயானத்தில் ஆதிபராசக்தி அருட்கோலத்தில் எழுந்தருளியிருப்பதைக் கண்டதாகவும், அங்கு மேடை அமைத்து அம்மனை வழிபட்டு அருள் பெற்றதாகவும் தலபுராணம் கூறுகிறது.

மாசாணி அம்மன் நீதி தேவதையாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறார். நம்பிக்கைத் துரோகம், பொருள் திருட்டு, எதிரிகளால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி இங்குள்ள ‘நீதிக்கல்லில்’ மிளகாய் அரைத்து பூசி அம்மனிடம் முறையிடுவது வழக்கம்.

தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால், மாசாணி அம்மன் நிச்சயம் நீதி வழங்குவார் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இதனால், துயரங்களுடன் வரும் பக்தர்களுக்கு நம்பிக்கையையும் மனநிம்மதியையும் அளிக்கும் தலமாக ஆனைமலை மாசாணி அம்மன் திருக்கோயில் சிறப்புப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *